ஆழி சூழ் உலகு: ஒரு வாசிப்பு

ஆழி சூழ் உலகு: ஒரு வாசிப்பு

ஜனநாயகம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் மிகப்பெரிய வெண்ணிறப் பரப்பும் அதில் ஓவியம் எழுதுவதற்கான பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளும் வழங்கப்பட்டிருக்கையில் அப்பரப்பின் ஒரு மூலையில் உடைந்த பென்சில் ஒன்றால் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறோம் நாம் என்ற உணர்வை அடைவேன். அது போலத்தான் நாவல் என்ற வடிவமும் தமிழ் இலக்கியத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது என்று தோன்றுகிறது. நாவல் என்று சொன்னதும் பெரிய புத்தகத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் கொண்ட ஒரேயொரு கதை எழுதப்பட்டிருக்கும் என்ற எண்ணம் தான் மலோங்கி இருந்திருப்பதை உணர முடியும். அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் க.நா.சுவின் பொய்த்தவு சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை போன்ற படைப்புகளில் அசலான நாவலை உருவாக்கக்கூடிய உத்வேகமும் நாவல் வழங்கும் விரிந்த கதையாடல் பரப்பின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான தாகமும் இருப்பதைக் காண முடியும். நாவலின் அதிகபட்ச சாத்தியங்களை அறிந்திருக்கும் இன்றைய வாசகன் மேற்சொன்ன படைப்புகள் முன்னோடி முயற்சிகள் என்ற வகையிலும் அன்றைய சூழலின் பொதுத்தன்மையில் இருந்து விலகி எழுந்த சாகசத்திற்காகவும் இப்படைப்பாசிரியர்களை பாராட்டலாம். ஆனால் ஒரு நாவல் அளிக்கும் "ருசி" இப்படைப்புகளில் குறைவாகவே இருந்தது. காலத்தை பிரவாகமாக மாற்றிக் காட்டும் தன்மையும் தீர்வு காண முடியாது வாழ்க்கையின் சிக்கல்களை கோடிடுவதும் நாவல் என்ற வடிவை உத்தசிக்கும் போது இயல்பாகவே வந்தமரும் குணாம்சங்கள். நாவல் என்ற வடிவம் மேற்கில் பிரபலமாகத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பிரம்மாண்டமான நாவல்கள் உருவாகிவிட்டன. ஆனால் தமிழ் சூழலில் இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகளில் கூட அது நடைபெறவில்லை. இக்குறைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட ஜெயமோகனின் "நாவல் கோட்பாடு" என்ற நூல் வெளிவந்த பிறகு தமிழில் பெருநாவல்கள் வெளிவரத் தொடங்கின. ஆச்சரியம் என்னவெனில் அந்நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே தரமான தமிழ் பெருநாவல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன என்பது தான். பெருநாவல்கள் என்பதை விட நாவல்கள் என்பதே சரியான பிரயோகம். ஆனால் அதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களின் அளவு மற்றும் அவை எடுத்துக் கொண்ட கதையாடல் காலம் இவற்றைக் கணக்கில் கொண்டு தொன்னூறுகளுக்குப் பிறகு வந்த நாவல்களை பெருநாவல்கள் என அழைக்க வேண்டியிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் நாவல் எதிர்கொள்ளும் சவால்கள்

நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் சில மாதங்களுக்கு முன் எண்பதுகளுக்குப் பிறகு இந்தியாவில் தொலைக்காட்சி எப்படி பிரபலமடையத் தொடங்கியது என்பதை முன் வைத்து ஒரு தொடரை ஒலிபரப்பினர். கிட்டத்தட்ட இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இந்த தொலைக்காட்சி பரவலாக்கத்தினால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து கணிசமான கதைகள் எழுதப்பட்டிருக்கும். தொலைக்காட்சியின் பரவலாக்கம் இலக்கியத்தின் மொழியிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. டால்ஸ்டாயின் பெரும்பாலான சூழல் சித்தரிப்புகளில் சில கவித்துவமான அழகைத் தொட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை இன்று அலுப்பூட்டக்கூடியவை. ஒரு சூழலை வாசகனின் கண் முன் கொண்டு வருவதற்கென விரிவான சித்தரிப்பு தேவைப்பட்ட காலத்தில் எழுதியவர் டால்ஸ்டாய். மார்க்கேஸிடம் அது குறைந்திருப்பதை காண முடிகிறது. தொலைக்காட்சிகளின் பரவலாக்கமும் இந்த மொழிநடையின் மாற்றத்திற்கு ஒரு வகையில் காரணம். ஆனால் இன்றைய வாசகன் நேரில் காணும் இடங்களை விட அதிக இடங்களை காட்சி ஊடகங்களில் கண்டு விடுகிறான்.

"பரந்து விரிந்த கடல்முன் கைகளை மார்பில் கோத்து நின்றான் பார்த்திபன்" என்று தொடங்கினால் ஒரு நவீன வாசகன் அலுப்படைவான். அவன் நுணுக்கமான தகவல்களை எதிர்பார்க்கிறான். அத்தகைய தகவல் கிளர்ச்சியை அளிக்க நினைத்து நாவலுக்கான உயிரோட்டத்தை கெடுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே சூழலுடன் நெருங்கி ஒரு கேமரா வாசகனுக்கு காட்டி விட முடியாதவற்றை தன் எழுத்தின் வழியாக தரிசிக்க வைப்பது சூழலில் வாசகனை நிறுத்துவதற்கான முக்கிய திறன். அதனால்தான் பாவனைகள் இன்றி தங்கள் வாழ்ந்த வாழ்க்கையை அதன் நுணுக்கத்துடன் பதிவு செய்யும் படைப்புகள் உடனடியாக இன்றைய வாசகனால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எழுத்தாளன் தான் சித்தரிக்கும் சூழலில் மனப்பூர்வமாக வாழ்ந்தாலன்றி இன்றைய வாசகனை அச்சூழலுக்குள் கொண்டு வர முடியாது. மொழிப்புலமையைத் தாண்டி சூழலை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பது நவீன நாவலுக்கான முக்கியத் தேவை. ஆகவே தான் வாசிக்கும் பழக்கம் உடையவர்களில் பெரும்பான்மையானவர்கள் அறிந்திராத சூழலைச் சொல்லும் படைப்புகள் கவனம் பெறுகின்றன. காட்சிப்படுத்தப்படாத ஒரு நிலத்தினுள் நுழைவதன் பரவசமும் அவ்வாழ்க்கையின் இன்பங்களையும் சவால்களையும் துயர்களையும் அறிந்து கொள்வதன் நிறைவும் சொல்லப்படாத ஒரு நிலத்தின் வாழ்க்கையை வாசிக்கும் போது ஏற்படுகிறது. வேறுபாட்டினை கண்டறிந்து அதனை பதிவு செய்வதற்காக விலகிச் செல்வதும் பதிவு செய்வதன் வழியாக அவ்வேறுபாடும் சமூகத்தின் ஒரு அங்கம் என உணர்த்துதலும் ஒருவேளை நவீன நாவலின் பணிகளில் ஒன்றாக இருக்கலாம. அவ்வகையில் ஆழிசூல் உலகு சொல்லப்படாத வாழ்க்கை ஒன்றை அறிமுகம் செய்கிறது அவ்வாழ்க்கையின் அசலான குருதியோடும் கண்ணீரோடும்.

ஆழிசூல் உலகு - ஜோ.டி.குருஸ்

பெருநாவல் வடிவமைப்பில் தமிழினி பதிப்பகம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியும். அட்டை வடிவமைப்பும் ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் இணைக்கப்பட்டுள்ள சங்கப்பாடல்களும் வாசிப்பினை சட்டென ஒரு கனவு நிலைக்கு இழுத்துச் செல்கின்றன.

கோத்ராப்பிள்ளை, சூசை,சிலுவை என மூன்று தலைமுறை மனிதர்கள் சுறா வேட்டைக்குச் செல்கையில் கட்டுமரம் உடைந்து கடலில் தத்தளிப்பதோடு தொடங்குகிறது நாவல். அவர்களின் ஒருவார தத்தளிப்பின் வழியே விரிகிறது ஆமந்துறை எனும் கடற்கரை கிராமத்தின் அறுபதாண்டுகால வரலாறு. சுறாப்பாறு எனப்படும் சுறா வேட்டைக்கு தொம்மந்திரையும் கோத்ராவும் போஸ்கோவும் செல்வதோடு தொடங்குகிறது நாவலின் மற்றொரு பகுதி.

தொம்மந்திரை மடுத்தீன் தோக்களத்தா கருத்தா அமலோற்பவம் காகு சாமியார் என அறிமுகமாகும் ஒரு பெயர் கூட தொடக்கத்தில் அணுக்கமானதாக இல்லை. ஆனால் வாசித்து முடிக்கையில் இவர்கள் நம் உறவு ஆவது எப்படி என்பது புரியவில்லை. அதோடு நீரோட்டம் பருவக்காற்று என்றெல்லாம் வாசித்திருப்பதால் வாநீவாடு சோநீவாடு சோழவெலங்க வாடவெலங்க பருமல் தாமான் என நேரடியாக உரைக்கப்டும் சொற்களைப் புரிந்து கொள்ள முதல் இருபது பக்கங்கள் தாண்டும் வரை அடிக்கடி கடைசிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொல் விளக்கங்களைத் திருப்பித் திருப்பி பார்க்க வேண்டியிருந்தது. அதன்பின் கதையோட்டம் வெகு இயல்பாக ஆழியில் சுழற்றி அடிப்பது போல இழுத்தும் விலக்கியும் விளையாடத் தொடங்கி விடுகிறது. பொருளின்மையை முட்டி நிற்கும் எண்ணற்ற மரணங்கள் கடலிலும் கரையிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அண்ணன் இறந்துவிட காகுசாமியாரின் வேண்டுகோளுக்கிணங்கி அண்ணன் மனைவியை மணக்கிறார் தொம்மந்திரை. திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன் இறந்ததும் முப்பது நாட்களில் சொல்லிவைத்து இறந்து போகிறாள் அமலோற்பவம். திகைத்து நிற்க வைக்கும் இடம் இது. நுழையும் நாவலின் கனமும் அடர்வும் அதைச் சூழ்ந்திருக்கும் ஆழியின் பிரம்மாண்டமும் தொடர்ந்து அச்சுறுத்திய வண்ணமே உள்ளன.

ஆமந்துறையின் வெவ்வேறு வகையான குடும்பங்களின் வாழ்க்கையையும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பதிவு செய்தபடியே நகர்கிறது ஆழிசூல் உலகு. மனிதர்களின் இயல்பான பிரியத்தையும் காமத்தையும் அற்பத்தனங்களையும் தியாகங்களையும் சொல்லியபடி செல்கிறது நாவல். சித்தரிப்பின் நேரடித்தன்மை ஒரு வகையில் அச்சுறுத்துகிறது. தொம்மந்திரை கோத்ரா தோக்களத்தா அன்னம்மா என ஒரு தலைமுறை. சூசை கில்பர்ட் எஸ்கலின் மேரி ஜஸ்டின் வசந்தா என இரண்டாவது தலைமுறை. சிலுவை சேகர் அமல்டா எலிசா வருவேல் என மூன்றாவது தலைமுறை. இந்த நாவலின் சிறப்பு ஒரு தலைமுறையின் வஞ்சங்களும் தியாகங்களும் சட்டென அடுத்த தலைமுறையை தண்டும் இடங்கள்.சேகர் தன் தாத்தா தொம்மந்திரையாரிடம் கட்ட கதைகளை எண்ணியபடி மணப்பாட்டிலிருந்து ஆமந்துறை வரை நடந்து செல்லும் இடம் அத்தகைய ஒன்று.

தனுஷ்கோடியின் அழிவு இந்திய சுதந்திரம் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து தப்பி வருகிறவர்கள் என ஒரு விரிவான சித்திரமும் இந்த நாவலில் உள்ளது. வாழ்க்கைப்பாடுகளைச் சொல்வதனால் வாழ்வு குறித்த ஒற்றைவரி முன் முடிவுகளை கலைத்தபடி தான் முன் செல்ல வேண்டியிருக்கிறது. கடல் உட்புகுவதால் அழியும் பெர்தினாந்தின் பாழடைந்த பங்களா ஒரு குறியீடு. சிதிலங்களாக எஞ்சிய நேற்றைச் சுமந்தபடி மனிதர்கள் இன்றை வாழ்கிறார்கள். மிக விரிவான நுணுக்கமான கடல் குறித்த விவரணைகள் வழியாக மிக இயல்பாக நாவலின் சூழலில் நிறுத்தப்பட்டுவிடுகிறோம். வாசித்து முடிக்கும் வரை ஒரு அலையோசையை தொடர்ந்து கேட்டதை இப்போது எண்ணிக் கொள்கிறன். ஆமந்துறையின் அத்தனை உரையாடல்களையும் நிகழ்வுகளையும் அந்த இரைச்சலோடு தான் நினைவு கூற முடிகிறது.

காகு சாமியாரின் இறப்பின் போது பிள்ளைகள் பெற்றுக் கொள்ளமால் உறவினர் பிள்ளைகளை வளர்த்துக் கரை சேர்க்கும் கோத்ராவிடம் அவர் சொன்ன வார்த்தைகளாக ஒலிக்கும் குரல்

" கோத்ரா இந்த உலகத்துல எல்லாத்தயும் விட மிஞ்சின சக்தி தியாகத்துக்குத்தாம் உண்டு"

நாவலின் குரலாக சாராம்சம் கொள்கிறது. மனித வாழ்வின் பெரும்பான்மை குணமான ஆழ்ந்த வஞ்சங்கள் பகைமைகள் அற்பத்தனங்களுக்கு மத்தியில் மனிதம் உயர்ந்தும் நிற்பதை கோத்ரா, மரிய அல்போன்ஸ் காகு , தொம்மந்திரை,மேரி என பல பாத்திரங்கள் வழியாக காண முடிகிறது. கால மாற்றத்தை உரையாடல்கள் வழியாகவே சித்தரித்து விடுகிறார் ஆசிரியர். கில்பர்ட்டின் கள்ளமின்மை அற்பத்தனமாக மாறுவது சூசையாரின் மனம் செய்த தவறுக்கென இறுதிவரை அமைதி கொள்ளாமலிருப்பது சூசையார் காணாமலாகும் போது அவருடன் தொடர்பிலிருந்த பெண் பரிதவித்து நிற்பது ஜஸ்டின் மீதான வசந்தாவின் வெறுப்பு ரோஸம்மாவின் மீதான எலிசாவின் வெறுப்பு என முடிவு சொல்ல முடியாத வாழ்வியல் சிக்கல்களை தொடர்ந்து அடையாளப்படுத்துகிறது நாவல்.

தேவாலயங்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் இடையே நிகழும் உரசல்களையும் கட்டுமரங்களில் மீன் பிடித்தல் குறைந்து எந்திரப் படகுகள் எழுவதையும் இறால் விற்பனை பெருகுவதையும் சித்தரித்துச் செல்கிறது. சமகால அரசியல் பிரக்ஞை தென்பட்டாலும் அதுவொரு எல்லை வரைதான். அனைத்துக்கும் மேலாக பரதவர்களின் வாழ்க்கையை சித்தரிப்பதன் வழியாக மனிதனின் இருத்தலுக்கான போராட்டங்களையும் அவன் அடையும் துயர்களையும் வழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் சொல்கிறது ஆழி சூல் உலகு. விவசாயக் குடிகளும் பிராமணர்களும் தமிழ் இலக்கியத்தில் போதிய அளவு சித்தரிக்கப்பட்டுள்ளனர். பரதவர்கள் அளவுக்கு கடுமையான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டு வாழும் இன்னொரு பெரும் இனம் இங்கில்லை. ஒவ்வொரு நாளும் உயிர் போகும் அபாயத்துடன் வாழும் நிலையாமை உடைய வாழ்க்கையை கொண்டவர்கள். அதனாலோ என்னவோ வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கு போல அவர்களுடைய அன்பும் நேசமும் நடுங்கிக் கொண்டு இருக்கிறது. எந்நேரமும் அணைந்துவிடலாம் என்ற நிலையிலிருக்கும் கவர்ச்சியும் பதற்றமும் தான் அந்த வாழ்க்கையை இவ்வளவு அடர்வு நிறைந்ததாக மாற்றுகிறதா?

இந்த நாவல் குறித்து சொல்ல நிறைய இருப்பதாக தோன்றுகிறது. மனம் அமைதி அடையும் வரை காத்திருக்க வேண்டும்.

(நன்றி: சுரேஷ் பிரதீப்)

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp